Saturday, 8 January 2022

மரபுரிமைத் திங்கள்

 தனித்துவம் பேணும் மரபுரிமைத் திங்கள்

பல்லினப் பண்பாட்டுச் சூழலில் வாழ முற்படுகின்ற தனித்துவமான இனங்கள் ஒவ்வொன்றும் தத்தமது அடையாளங்களைப் பேணுவதற்காகப் பெரும் போராட்டங்களை நடத்துகின்றன. தாம் சார்ந்த இனத்துக்குள்ளிருந்தும் புறச்சூழல்களிலிருந்தும் கடும் சவால்களை எதிர்கொள்கின்றன. இதற்குக் கனடா தமிழ்ச் சமூகமும் விதிவிலக்கல்ல.

தாயகத்தில் வாழும்போது ஓர் இனத்துக்குள் அடையாளங்களைப் பேணுவதற்காகப் போராட வேண்டியதில்லை. அங்கே எங்கு காணினும் தமிழர், எத்திசை நோக்கினும் தமிழ்ச் சூழல். அங்கு அடையாளங்களே வாழ்வாகும் வாழ்வே அடையாளங்கள் ஆகும். அந்தத் தாய்ப்பெருநிலத்தில் அடையாளப் பேணல் பற்றிய விழிப்புணர்வுக்கு அவசியம் இல்லை. நமக்கு அங்கே வேறு பணிகள் இருந்திருக்கும்.

புலம்பெயர்ந்தோர் வாழ்வு முற்றிலும் மாறுபட்டதொரு புதியதளத்தில் அமைக்கப்பட்டுள்ளது. அது வண்ணமயமான வாழ்வியல் கவர்ச்சிகள் மிக்க அழகுப்புலம். எமது தனித்துவ அடையாளங்களையும் மரபுகளையும் போற்றிப் பாதுகாக்கத் தவறின் அவை யாவும் எம்மை விட்டுத் தானாக நழுவி சென்றுவிடும் வாய்ப்புகளை இந்த வாழ்வியல் புலங்கள் கொண்டுள்ன.

ஒவ்வோர் இனமும் இனமாக வாழ்ந்தவாறே கனடாவின் தேசிய நீரோட்டத்தில் வலுவாக இணைந்திருக்க வேண்டும். இதையே வாழிட நாடுகளின் பல்லினப் பண்பாட்டுக்கொள்கை வெளிப்படுத்துகின்றது. 


பல இனங்கள் கலந்து வாழும் இச்சூழலில் ஒவ்வோர் இனமும் தனித்துவ அடையாளங்களைப் பேணி வலுவேடு ஒன்றிணைந்து வாழ்ந்தால் மட்டுமே எம் இனஞ்சார் தேவைகளை வாழிடங்களில் வென்றெடுக்க முடியும். 

எமது முதன்மையான பணி தாயகம் நோக்கிய செயற்பாடுகளே. தலைமுறை தலைமுறையாக எம்மையும் எம்மினத்தையும் தாங்கி வளர்ந்த அந்தப் பெருநிலத்தைப் போற்றிப் பேண வேண்டியது எம் வரலாற்றுக் கடன். வறியோரையும் பாமரரையும் கணிசமாகக் கொண்டுள்ள எமது தாயகம் அரசை விடப் புலம்பெயர்ந்தோரான எம்மையே பெரிதும் நம்பியிருக்கின்றது. இனஞ்சார்ந்த ஒருங்கிணைப்பு இன்றி இவற்றை எம்மால் நிறைவேற்ற முடியுமா?

புலம்பெயர்ந்து வாழும் ஒவ்வொரு நாட்டிலும் நாம் கொண்டிருக்கும் இனஞ்சார்ந்த வலிமையான கட்டமைப்பே எம்மையும் எம் தாயகத்தையும் எக்காலத்திலும் காக்கவல்லது. 

'நாம் தமிழர்" என எம்மை வெளிப்படுத்தி வாழ்வதில் உள்ள பெருமைகளையும் உணர்ந்து கொள்ளுதல் வேண்டும். ஐநூறு ஆண்டுகளுக்கு முன் தோன்றிய இனங்கள் கூடத் தம் அடையாளங்களைப் பேணுவதிலும் வெளிப்படுத்துவதிலும் வெறியோடு செயற்படுகின்றன. 

இவ்வுலகில் தமிழர் முதற்குடிகளா என்பது எமக்குத் தெரியாது. ஆனால் நாம் இப்பூமியின் பழங்குடிகள் என்பது பேருண்மை. 

இவ்வலகில் எம்மைத் தனிமனிதராகவும் இனமாகவும் பெருமைப்படுத்தவல்ல பேரடையாளம் நாம் தமிழரென்பதே. இதைத் துறந்தோ மறந்தோ செல்ல முற்படுகின்ற ஒவ்வொருவரும் தம்மைத்தாமே அழித்துக்கொள்பவராவர். 

இத்தகைய விழிப்புணர்வுகளை ஏற்படுத்துவதற்கே அமைப்பு சார்ந்த செயற்பாடுகளாக தமிழர் மரபுத் திங்கள் நிகழ்வுகள் அமைகின்றன. இந்த நிகழ்வுகள் முழுமையான பெருவடிவம் கொள்ள நிதிவளமும் ஆட்பலமும் தேவை. இச்செயற்பாட்டின் முக்கியத்துவத்தை உணர்ந்து மாற்றுப்பயன் கருதாமல் பலரும் இணைவோமேயாயின் தோன்றவிருக்கும் ஒவ்வொரு தலைமுறையினையும் நாம் போற்றிப் பாதுகாக்க முடியும்.

இந்தத் தைத்திங்களில் பல்வேறு மரபுசார் நிகழ்வுகள் எங்கும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. பண்பாட்டு வளம் மிக்க தைப்பொங்கல் விழாவும் புலம்பெயர்ந்தோரால் எழுச்சியோடு முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இந்த நிகழ்வுகளே இளைய தலைமுறையினருக்கு அறிவூட்டலாக அமையவல்லவை. 

எதிர்கால தமிழ்ச்சமூகத்தின் அடையாளம் சார்ந்த இருப்பைக் கருதி, உறுதியோடும் வலிமையோடும் இயங்குவோம். 


No comments:

Post a Comment

மரபுரிமைத் திங்கள்

  தனித்துவம் பேணும் மரபுரிமைத் திங்கள் பல்லினப் பண்பாட்டுச் சூழலில் வாழ முற்படுகின்ற தனித்துவமான இனங்கள் ஒவ்வொன்றும் தத்தமது அடையாளங்களைப் ப...